நட்பின் வாழ்த்து!
இனியவனே! இராமனேஎம் அன்பு நண்ப!
இளமைமுதல் தென்றலைப்போல் பழகும் உன்றன்
கனியமுதத் தமிழையாம் மறப்ப தில்லை!
கார்த்திகையின் மழைபோலப் பொழியும் நட்பைத்
தனித்திருந்து நினைக்கின்றேன்! உன்னைப் போன்று
தகைமைமிகு நண்பர்தாம் யாரே என்று
பனிமலரைப் போன்றநெஞ்சம் உனது நெஞ்சம்!
பாசத்தின் அருவியுன்றன் செந்தேன் பேச்சு!
பாரதிஉன் மானசீக ஆசான்! அன்னோன்
பாதையிலே உன்பயணம் தொடர்ந்தாய்! உன்றன்
மார்பினிலே பூணூலைத் தரித்தாய்! ஆயின்
மனத்தினிலே மனுநூலைத் தரித்த தில்லை!
பாருலகை படைத்த இறை நீக்க மின்றிப்
பரவியுள்ளான் எவ்வுயிர்க்கும் உயிராய் என்னும்
ஆரமுதம் நிகரான மெய்ஞ் ஞானத்தை
அரும்பிளமை நாள்முதலாய்த் தலைமேற் கொண்டாய்!
குளங்களெல்லாம் தாமரையின் குவிந்த மொக்கால்
கும்பிடுதல் போல்விளங்கும் காட்சி சூழ்ந்த
வளம்செறிந்த "இளங்காடாம்" சிற்றூர் சூழ்ந்து
வாழ்கின்ற வைணவர்தம் மரபில் தோன்றி
உளம்கொள்ளைக் கொண்டதமிழ் செழித்தே ஓங்க
உயர்தொண்டு புரிபவனே! இராமா! எல்லா
நலங்களுடன் நிலமீதில் சான்றோர் போற்ற
நல்வனசா மணியுடனே வாழ்க! நீடு!
-ஆரணி உமர்
26-02-1999ல் கவிஞர் கணக்காயன் என்னும் திரு. இ.சே.இராமனை எண்ணிவாழ்த்தி எழுதிய கவிதை!
சிறப்பான கவிதை.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteஅற்புதமான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteமிகவும் அருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Delete