Sunday, 7 October 2012

செய்யில் சேய்!- கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)



                                                              செய்யில் சேய்!

சேற்றுவயல்   தன்னிலங்கு    ஏற்றமிகு            மாதர்கள்
நாற்றுமுடி       கட்டெடுத்து    நாலெண்ணிப்   பக்குவமாய்
சேற்றழுத்தி    ஆழ்த்துவிரல் தன்னளவில்      நட்டுழைக்கும்
ஆற்றலதைச்  சாற்றுவது      அம்மவோ           இயலாது!
நாற்றனைய   பிஞ்சொன்று  தன்கைகள்           ஜோடிதனில்
தேற்றமாய்    கட்டுநாற்று     ஏற்றுச்செல்       பெண்பிள்ளை
"தோற்றிடாது  வேளாண்மை" பின்னாளில்  இவ்விளையர்
ஏற்றங்கள்   சேர்ப்பதுவாய்     நண்ணிடுது          மாமகிழ்வே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: தென்றல் சசிகலா

Monday, 1 October 2012

சித்தி! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

சித்தி!
 
 
தாயின்பின்     தோன்றியவள்!    தந்தைதன்       தம்பியரின்
 
தூயிதய             நாயகிகள்              தாதைகாண்    நற்றுணைவி
 
போயினபின்    தாரமென              வந்திட்ட          சீர்மாது
 
சேயினத்து       சித்தியாக             சேமங்கள்        சேர்த்திடுவர்!
 
தாயிதயம்,       இன்சொல்சேர்    ஆதரவு,              நற்பாசம்,
 
தன்மதலை      மூத்தாளின்          எச்சமென        வேறுபடா
 
ஒத்தநிலை      காட்டுமுளம்       கொண்டமையும்  பண்பமைந்தால்
 
சித்தியாக          வந்தாலும்            சீர்தாய்தான்     அன்னவளே!
 
 
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)