Tuesday 31 December 2013

புத்தாண்டு 2014- நல்வாழ்த்து! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)



பத்திரண்டு          நூறோடும்              ஏழிரண்டும்                 சேர்ந்தமைந்த
புத்தாண்டு           தோற்றந்தான்       இந்நன்னாள்               இன்றிதனை
கத்துகடல்           சூழுலகின்                நாடெல்லாம்             ஏற்கின்றார்!
உத்தமனாம்       வள்ளுவனின்       ஆண்டென்றால்         முப்பத்து
நான்கிதனின்     மிக்கதுவாம்!          முஸ்லீம்கள்            ஆண்டென்றால்
சுத்தமதாய்         ஈரேழ்நூற்                றைஏழே!                    நல்விஜய
ஏத்துகின்ற         மார்கழியின்           பத்தோடேழ்               நாளின்று!
மெத்தநல்ல      மாண்புதனே!          நல்லனுமன்              போற்றிநாளே!
நாயனாரில்       சாக்கியரும்             வாயிலாரும்             இன்னாளே!
சித்தமெலாம்    நன்மகிழ்வும்          சிந்தனையில்           மாணருளும்
நத்திடவே          பல்லோரும்              நற்செயல்கள்         நேராற்றி
மன்னிடுக           நின்வாழ்வு               நும்மில்லம்             சுற்றத்தார்
நட்பினரும்         எல்லோரும்             நன்றாற்றி                வாழியரே!


-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Tuesday 24 December 2013

புனித கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்!- கவிஞர் கணக்காயன்



அனைவருக்கும் என் இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துகள்!

இந்த நன்னாளில் "எங்கள் மேய்ப்பர்" எனும் தலைப்பில் என் கவிதையால் வாழ்த்துகிறேன்!

கவிதைக்கான இணைப்பு இதோ!


                                எங்கள் மேய்ப்பர்!

நன்றி!

கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Sunday 22 December 2013

புலவர் பாடும் பொன்மனச்செம்மல்!- கவிஞர் கணக்காயன் (26-10-1971ல் எழுதியது)


                                                                   பட உதவி: கூகிளுக்கு நன்றி!


புகழ்"அரச                           கட்டளை"யால்                     பூத்த                             விஜய!
பகலிரவு                              பாராத                                       "அன்பே                        வா"வா!
அகமெல்லாம்                  பதிந்திட்ட                                "ஆசை                         முகம்"நீ!
"ஆயிரத்தில்                      நீஒருவன்"!                             ஆதவனே                  போல்வாய்!
"இரகசிய                            போலீசா"ய்                              இருள்மனத்தோர்   அஞ்ச,
"எங்கவீட்டுப்                    பிள்ளை"நீ!                              "எங்கள்                        தங்கம்"!
"என் அண்ணன்"            "ஒளிவிளக்"                              கென்பார்                     பல்லோர்!      
"என் கடமை"                  வழிநடத்தல்                             என்றே                         கொள்வார்!
"கணவன"வன்               நல்லன்பின்                              கன்னிக்                       கலைக்கே!
"கலங்கரை                      நேர்விளக்கம்"                          கண்ணியத்               தோழர்க்கே!
"கன்னித்தாய்"                போல்வான்நம்                        கற்புநிறை                  தம்பியர்க்கே!
"காவல்கா                        ரனா"வான்                                 கள்ளினம்                   கொள்வார்க்கே!
தான்"குடியிருந்             தஓர்கோயில்"                         தள்ளாதே                    வாழ்த்தி,
சீர்"குமரிக்                        கோட்டத்"தே                           சிந்தை                          கொள்ளாய்!
"ச்க்ரவர்த்                         தித்திருமகட்"                          சீர்மேவும்                     வல்லான்!            
"சந்திரனின்                     உதய"மாய்ச்                            சங்கமித்த                    நல்லோய்!
வ்ந்தனையால்              சீர்"தலைவனாய்"                  வந்தவரே                     வாழ்க!
தன்"தாயின்                    மடியில்"தான்                         கற்றபடி                         நிற்போய்!
திரைமகளின்                 "தாலிபாக்யன்"                        தாம்நும்                        மறுபிறவி!    
"தெய்வத்தாய்"              பெற்றெடுத்த                          தேவமகன்                     போல்வீர்!
தென்திரைப்பெண்       வான்காதல்                             "தேடிவந்த                     மாப்பிள்ளை"!
தலைமகனாய்க்            கலைமகட்கே                        "தொழிலாளி"               ஆனோய்!
"நம்நாடு"                         நேருறவே                                  நாளெல்லாம்              உழைப்போய்!
"நாடோடி"                       நீயெனினும்,                            "நாடோடி                       மன்னன்"!
"நான் ஆணை               யிட்டால்"                                  நன்றாகும்                      என்றோய் !           
"படகோட்டி"                 "பணக்காரக்                               குடும்ப"மென               எண்ணாய்!
"பணத்தோட்டம்"       "பணம்படைத்தவன்"             பங்குக்கே                       என்றாய்!
"புதியபூமி"                     சின்னவர்                                   பூத்திடும்                         செய் என்றாய்!      
"பெரியைடத்துப்         பெண்"என்றால்                       பேருக்கே                       "மகாதேவி"!
"மாட்டுக்கா                   ரவேலன்"நீ!                             மண்டியதே                     "முகராசி!"
"விவசாயி"                    நட்டார்க்கு!                            "வேட்டைக்கா                 ர"னாவாய்நீ
தவறிழைக்கும்           மாந்தர்க்கே!                            தண்தமிழாய்                  வாழ்வாயே!
புலவர்பா                       நாயகனாம்                               பொன்மனச்செம்           மல்  என்கோ?
நிலவுபுகழ்                    பாரி என்கோ?                           நீண்நிலத்து                     மாரிஎன்கோ?
புரட்சிநடி                       கரென்கோ?                                பிறர்க்குரியா                  ளரென்கோ?
பொன்னியாய்நற்      பைந்தமிழாய்ப்                        பாரகத்தே                
நின்றிடுநல்                  அண்ணாபோல்                        நீள்நிலத்து                       நீடுகவே!         

-கவிஞர் கணக்காயன்( இ.சே.இராமன்)  
        

Friday 20 December 2013

காப்புக் கவிதை- அருள் வேண்டல்-கவிஞர் கணக்காயன்( இ.சே.இராமன்)



விநாயகர்.

அல்லல்         அகற்றும்         செல்வ            விநாயகா!
நல்லன          அருளும்           கணபதித்       தேவே!
கல்வியும்      செல்வமும்    களித்திட        நல்கும்
விக்ன             விநாயகா         நின்னருள்     சேரே!


தென்கலை ஶ்ரீனிவாசப்பெருமாள், முத்தியால்பேட்டை.

பூத்தபுகழ்              புதுவைசேர்            முத்தியால்பெட்        காந்திவீதி
மாத்தமிழின்        தென்கலைசேர்     சீனிவாசர்                    பத்மவதி
ஏத்துமிசை            ஆஞ்சநேயர்           ஏற்றமிகு                     ரங்கநாதர்
காத்தருளும்        நல்லிராமர்             கண்ணனெனும்       மாலவரும்
தூண்பிளந்த        சிங்கமுகர்               மற்றுள்ள                   வீரஆஞ்ச
நேயரொடு            கோதண்ட              ராமர்தம்                       பேரருளை
தூயமனம்             வந்திக்கும்!            கூம்பாதே                   மாக்கருணை
நேயமொடு          சேர்த்தெனக்கு,     காண்முயற்சி           வெற்றிபெற 
ஈந்தருள்வீர்         மாலவரே!             ஈதெனது                     வேண்டுதலே!      

                                                            நடராசர்.              

ஆதிரைமீன்           சேர்ந்துமிளிர்           ஆருத்ரா              நல்விழாக்காண்
மார்கழியில்           தில்லையில்,            குற்றால            சித்ரசபை
நெல்லையில்        தாமிரத்தே                கூத்தரசர்             மாண்நடனம்!
நாவூரும்                  நற்களிபோல்          ஆவுடையார்     கோவிலிலே
மாணுபதே              சக்காட்சி                    கொண்டருள்     ஈசன் தன்
மாக்கருணை        வேண்டுகின்றேன் ஏற்றபணி          வெற்றியுற
மத்வரகு                   நாதரொடு                  சைவசடை        யர்தானும்
பக்கலிலே             நற்றுணையாய்       பாங்காக             நின்றருள்வீர்!


பிற புதுவை மூர்த்தங்கள்

சீர்புதுவை           மணக்குளவி             நாயகரே!               மற்றுமுள
ஆர்புகழ்சேர்      வரதராச!                     லக்‌ஷ்மிஹ         யக்ரீவ!
தேவிப்ரத்            யங்கரா!மாண்          பஞ்சநதீஸ்வர்!   காமீஸ்வர்!
பாப்படைக்க      நூல்மலர                     பக்கலிலே           நின்றருள்வீர்!

திருத்தல தெய்வங்கள்

ஏற்றமிகு            அகோபிலத்தில்    ஏழ்வரையாம்           வேங்கடத்தில்
ஆற்றிடையே   அரங்கத்தில்           முக்கியமாம்             கச்சிதன்னில்
அல்லிக்கே        ணியில்,எவ்வுள்    ளூரதனில்,                ஆரணியில்
உத்திரமே           ரூரதனில்                " பாலவனம்"              இளங்காட்டில்
பாதூராம்           நல்லூரில்                 பாங்காகக்                 கோயில்கொள்
மாலவரின்       நல்லருளால்          நண்ணிடுக               வெற்றியே!

முந்தையர்

தொன்மைநாள்      மாவியாசர்,      வால்மீகி,               காளிதாசர்
மாக்கம்பர்,                நல்வில்லி,      வள்ளுவர்            மாண் அவ்வை,
தொல்கபிலர்,          பாரதி,பின்        பாவேந்து,            வள்ளலார்,
நாமக்கல்                  சீர்கவிஞர்,       தேசிகவி                நாயகமும்,
கண்ணதாசன்,        நல்வாலி,        வைரமுத்து,        காண்சுரதா
சந்ததியாய்ப்           பின் தொடர    வாழ்த்திடுவீர்     என்றனையே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)        


Wednesday 18 December 2013

ஓவியக்கவிதை!-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

அன்பு நண்பர், என் வலைப்பூவின் தந்தை திரு.வெங்கட்நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று, மேலே உள்ள ஓவியத்திற்காக நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு!


 பூமணக்கும்                     நற்சோலை          உண்கனியீன்    நீள்மரங்கள்!
 தூநிழல்சேர்                    மண்டபத்தின்       சூழலண்மை     நல்லிருக்கை!
 மூதன்பின்                நாயகனின்             முன்னமர்ந்த          காரிகையாள்!
 ஊட்டமிகு                        கார்குழலில்          துய்வெண்மை      கந்தமலர்
 சூடிநிற்கும்                       நேரிழையாள்       உள்ளபடி                 நாற்குணமும்
 துய்யதுவாய்க்               கைவளையும்       காற்சிலம்பும்        நன்கமைந்த
 நுண்ணியநல்                 குங்குமத்தாள்!     கச்சீர்க்கும்             பின்னழகால்
 முன்சரியும்                      நற்சேலை            நல்லுவப்பால்       நேர் ஈர்க்கும்
 கார்வண்டும்                   தேனீயும்                    பூமதுவை             ஏற்பதனை
 அன்னவளைக்              கொட்டிடுமோ?        என்றவந்தான்      ஓட்டுவதை

 தந்துள்ளீர்                       சித்திரமாய் !                ஓவியப்பா            ஏற்பீரே!

                                                               கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

குறிப்பு:
என் நண்பர் தன்னுடைய வலைப்பூவில் இதை வெளியிட்டுள்ளார். அதற்கான சுட்டி இதோ!   http://venkatnagaraj.blogspot.com/2013/12/1.html
அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்!

படியுங்கள்! தங்களின் கருத்துகளைப் பதியுங்கள்! நன்றி!

Sunday 15 December 2013

என்னைப் பற்றி நட்பாசிரியர், கவிஞர் ஆரணி கா.மு.உமர்! -கவிஞர் கணக்காயன் இ.சே.இராமன்

நட்பின் வாழ்த்து!


இனியவனே!                இராமனேஎம்                       அன்பு                       நண்ப!
இளமைமுதல்             தென்றலைப்போல்           பழகும்                    உன்றன்
கனியமுதத்                  தமிழையாம்                         மறப்ப                     தில்லை!
கார்த்திகையின்          மழைபோலப்                       பொழியும்             நட்பைத்
தனித்திருந்து               நினைக்கின்றேன்!             உன்னைப்             போன்று
தகைமைமிகு               நண்பர்தாம்                           யாரே                     என்று
பனிமலரைப்               போன்றநெஞ்சம்                 உனது                    நெஞ்சம்!
பாசத்தின்                      அருவியுன்றன்                   செந்தேன்             பேச்சு!

பாரதிஉன்                       மானசீக                                ஆசான்!                 அன்னோன்
பாதையிலே                  உன்பயணம்                       தொடர்ந்தாய்!     உன்றன்
மார்பினிலே                  பூணூலைத்                        தரித்தாய்!             ஆயின்
மனத்தினிலே               மனுநூலைத்                     தரித்த                    தில்லை!
பாருலகை                     படைத்த இறை                 நீக்க                         மின்றிப்
பரவியுள்ளான்             எவ்வுயிர்க்கும்                 உயிராய்               என்னும்
ஆரமுதம்                       நிகரான                               மெய்ஞ்                  ஞானத்தை
அரும்பிளமை              நாள்முதலாய்த்               தலைமேற்           கொண்டாய்!

குளங்களெல்லாம்     தாமரையின்                     குவிந்த                   மொக்கால்
கும்பிடுதல்                   போல்விளங்கும்             காட்சி                       சூழ்ந்த
வளம்செறிந்த             "இளங்காடாம்"              சிற்றூர்                     சூழ்ந்து
வாழ்கின்ற                   வைணவர்தம்                    மரபில்                    தோன்றி
உளம்கொள்ளைக்     கொண்டதமிழ்                  செழித்தே               ஓங்க
உயர்தொண்டு            புரிபவனே!                          இராமா!                   எல்லா
நலங்களுடன்             நிலமீதில்                            சான்றோர்               போற்ற
நல்வனசா                    மணியுடனே                    வாழ்க!                      நீடு!
                                  
                                                                                                        -ஆரணி உமர்
 
26-02-1999ல் கவிஞர் கணக்காயன் என்னும் திரு. இ.சே.இராமனை எண்ணி
வாழ்த்தி எழுதிய கவிதை!