விநாயகர்.
அல்லல் அகற்றும் செல்வ விநாயகா!
நல்லன அருளும் கணபதித் தேவே!
கல்வியும் செல்வமும் களித்திட நல்கும்
விக்ன விநாயகா நின்னருள் சேரே!
தென்கலை ஶ்ரீனிவாசப்பெருமாள், முத்தியால்பேட்டை.
பூத்தபுகழ் புதுவைசேர் முத்தியால்பெட் காந்திவீதி
மாத்தமிழின் தென்கலைசேர் சீனிவாசர் பத்மவதி
ஏத்துமிசை ஆஞ்சநேயர் ஏற்றமிகு ரங்கநாதர்
காத்தருளும் நல்லிராமர் கண்ணனெனும் மாலவரும்
தூண்பிளந்த சிங்கமுகர் மற்றுள்ள வீரஆஞ்ச
நேயரொடு கோதண்ட ராமர்தம் பேரருளை
தூயமனம் வந்திக்கும்! கூம்பாதே மாக்கருணை
நேயமொடு சேர்த்தெனக்கு, காண்முயற்சி வெற்றிபெற
ஈந்தருள்வீர் மாலவரே! ஈதெனது வேண்டுதலே!
நடராசர்.
ஆதிரைமீன் சேர்ந்துமிளிர் ஆருத்ரா நல்விழாக்காண்
மார்கழியில் தில்லையில், குற்றால சித்ரசபை
நெல்லையில் தாமிரத்தே கூத்தரசர் மாண்நடனம்!
நாவூரும் நற்களிபோல் ஆவுடையார் கோவிலிலே
மாணுபதே சக்காட்சி கொண்டருள் ஈசன் தன்
மாக்கருணை வேண்டுகின்றேன் ஏற்றபணி வெற்றியுற
மத்வரகு நாதரொடு சைவசடை யர்தானும்
பக்கலிலே நற்றுணையாய் பாங்காக நின்றருள்வீர்!
பிற புதுவை மூர்த்தங்கள்
சீர்புதுவை மணக்குளவி நாயகரே! மற்றுமுள
ஆர்புகழ்சேர் வரதராச! லக்ஷ்மிஹ யக்ரீவ!
தேவிப்ரத் யங்கரா!மாண் பஞ்சநதீஸ்வர்! காமீஸ்வர்!
பாப்படைக்க நூல்மலர பக்கலிலே நின்றருள்வீர்!
திருத்தல தெய்வங்கள்
ஏற்றமிகு அகோபிலத்தில் ஏழ்வரையாம் வேங்கடத்தில்
ஆற்றிடையே அரங்கத்தில் முக்கியமாம் கச்சிதன்னில்
அல்லிக்கே ணியில்,எவ்வுள் ளூரதனில், ஆரணியில்
உத்திரமே ரூரதனில் " பாலவனம்" இளங்காட்டில்
பாதூராம் நல்லூரில் பாங்காகக் கோயில்கொள்
மாலவரின் நல்லருளால் நண்ணிடுக வெற்றியே!
முந்தையர்
தொன்மைநாள் மாவியாசர், வால்மீகி, காளிதாசர்
மாக்கம்பர், நல்வில்லி, வள்ளுவர் மாண் அவ்வை,
தொல்கபிலர், பாரதி,பின் பாவேந்து, வள்ளலார்,
நாமக்கல் சீர்கவிஞர், தேசிகவி நாயகமும்,
கண்ணதாசன், நல்வாலி, வைரமுத்து, காண்சுரதா
சந்ததியாய்ப் பின் தொடர வாழ்த்திடுவீர் என்றனையே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)