Sunday, 7 October 2012

செய்யில் சேய்!- கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)



                                                              செய்யில் சேய்!

சேற்றுவயல்   தன்னிலங்கு    ஏற்றமிகு            மாதர்கள்
நாற்றுமுடி       கட்டெடுத்து    நாலெண்ணிப்   பக்குவமாய்
சேற்றழுத்தி    ஆழ்த்துவிரல் தன்னளவில்      நட்டுழைக்கும்
ஆற்றலதைச்  சாற்றுவது      அம்மவோ           இயலாது!
நாற்றனைய   பிஞ்சொன்று  தன்கைகள்           ஜோடிதனில்
தேற்றமாய்    கட்டுநாற்று     ஏற்றுச்செல்       பெண்பிள்ளை
"தோற்றிடாது  வேளாண்மை" பின்னாளில்  இவ்விளையர்
ஏற்றங்கள்   சேர்ப்பதுவாய்     நண்ணிடுது          மாமகிழ்வே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: தென்றல் சசிகலா

Monday, 1 October 2012

சித்தி! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

சித்தி!
 
 
தாயின்பின்     தோன்றியவள்!    தந்தைதன்       தம்பியரின்
 
தூயிதய             நாயகிகள்              தாதைகாண்    நற்றுணைவி
 
போயினபின்    தாரமென              வந்திட்ட          சீர்மாது
 
சேயினத்து       சித்தியாக             சேமங்கள்        சேர்த்திடுவர்!
 
தாயிதயம்,       இன்சொல்சேர்    ஆதரவு,              நற்பாசம்,
 
தன்மதலை      மூத்தாளின்          எச்சமென        வேறுபடா
 
ஒத்தநிலை      காட்டுமுளம்       கொண்டமையும்  பண்பமைந்தால்
 
சித்தியாக          வந்தாலும்            சீர்தாய்தான்     அன்னவளே!
 
 
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Saturday, 15 September 2012

இமை! -கவிஞர் கணக்காயன்


இமை!

கண்அனைய        கேள்வருக்கு காண்இமையே நன்மனைவி!
அண்ணனுக்குத் தம்பியரும்      அங்ஙனமே         நேரமைவர்!
மண்ணாளும்       சீர்முதல்வர்    மாண்பிரதமர்      அன்னவர்க்குத்
திண்ணமாக          நிர்வாக            ஊழியர்கள்            அத்தகையோர்!
வாழ்மதலை         யாவர்க்கும்     தாய்தந்தை           அப்படியே!
கண்ணிரண்டைக்   காப்பதுவும் மேல்கீழாம்         சீரிமையே!
கண்ணுக்குள்       பாவையாய்     கண்டிடுவோம் பெண்ணிணத்தை!
கண்இமையார்    தேவரெனல்    கற்பனையோ?   உண்மையோ?

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Wednesday, 15 August 2012

சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கணக்காயன்(இ.சே.இராமன்)

Thursday, 16 February 2012

விருதுக்கு நன்றி!-கணக்காயன்(இ.சே.இராமன்)

வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்!

எனக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுளதை அறிந்ததும் மகிழ்வுற்றேன்.
விருதுகளை வழங்கியவருக்கு என் நன்றி! இந்த வலைப்பூவை ஏற்படுத்த காரணமாய் இருந்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு இத் தருணத்தில் மிகுந்த நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த விருதினைப் பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. தமிழில் இலக்கியம், உரைநடை, கவிதை, கட்டுரை ப்டிப்பது மற்றும்
    கவிதை, கட்டுரைகள் படைப்பது.

2. கவியரங்கங்களில் பங்கேற்பது.

3.ஒத்த ரசனையுடைய அன்பர்களுடன் அளவளாவுவது.

4. நண்பர்களை சந்தித்து உரையாடுவது.

5. என்னுடைய பெயரன், பெயர்த்திகளுடைய திறமைகளைக் கண்டு வியந்து போற்றுவது.

6. அரசியல் சார்ந்த செய்திகளை அவ்வப்போது படிப்பது

7. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முக்கிய நிகழ்வுகளில் இயன்றவரை தவறாமல் கலந்துகொள்வது.

எனக்கு அளித்த இவ்விரண்டு விருதுகளை பின்வரும் வலைப்பூ நண்பர்களுக்கு அளிக்க விழைகிறேன்.



1. திரு எஸ்.ஏ.சரவணக்குமார் http://nellaikavisasaravanakumar.blogspot.in/

2. கோவை2தில்லி http://kovai2delhi.blogspot.in/

3. தமிழ் பேரன்ட்ஸ்http://www.tamilparents.com/

4.குறைஒன்றுமில்லைhttp://echumi.blogspot.in/

5. திரு துரை டேனியல் http://duraidaniel.blogspot.in/

 

விருதுகளை வழங்கிய காரஞ்சன்(சேஷ்) அவர்களுக்கும், என்னிடமிருந்து பெறுபவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றி!

கவிஞர் கணக்காயன்
(இ.சே.இராமன்)


 

Sunday, 1 January 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- கவிஞர் கணக்காயன்

வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கவிஞர் கணக்காயன்
வனஜாமணி