Monday, 13 January 2014

பொங்கல் வாழ்த்திற்கு நன்றி மடல்!- கவிஞர் கணக்காயன்




நன்றி மடல்!

பொன்மனத்தீர்!   நட்புளத்தீர்!      பொங்கல்நாள்    வாழ்த்தளித்தீர்!
பன்நலமும்          வாய்த்திடுக!    பார்போற்ற           உயர்ந்திடுவீர்!
இந்தமிழாய்,        வண்குறளாய், இசையோடு         நிலைத்திடுவீர்!
செந்நெல்லும்,    நற்கரும்பும்       செய் உயர்த்தல் போல்;நும்மில்
முன்னோரும்    பின்னோரும்     மூதின்பம்             கொண்டிடுக!
தென்குலப்பெண்  மஞ்சளென,   தேர்ந்தசுவை       இஞ்சியென,
மென்பாட்டாய்,  நற்கவியாய்,    மென்காற்றாய்,   நன்மழையாய்
மன்பதையில்     கேண்மையீர்!    மாண்புறுவீர்!  
நன்றியினைப்   படைக்கின்றேன்! நான்வணங்கி,       ஏற்பீரே!
  
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

பொங்கல் வாழ்த்து - கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)


பொங்கல் வாழ்த்து




   உழவர்                பெருநாள்!               தமிழர்                  திருநாள்!
   அழலனை          ஞாயிறுக்               கடிசில்                  படைநாள்!
   உழவினுக்         குதவிய                  பெருவலி             காளையும்
   குழவியாம்        அஃதின்                    சீரடிக்                     கன்றும்
   பழம்,பால்          பொங்கல்               கரும்பொடு         செந்நெல்
   சூழநின்                றேத்துவர்              குழலியர்,              தம்முடை
   குழவியர்            சுற்றமொடு           பழகியோர்            பல்கிட
   அழகாம்               இயற்கை              முருகின்               அருளால்
    வாழிய                 நிலனே!                வளத்தொடு         நீயும்!
    வாழியே              நீவிர்                       குறள்வழி            நின்றே!


                                  -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!





Sunday, 5 January 2014

காப்புக்கவிதை-பாபா அருள் வேட்டல்!



மாண்புதுவை    இலாச்பேட்டை   சீநிவாசப்      பேர்நகரில்

விண்ணூர்தி     சேர்முனையச்    சாலைசேர்   அக்‌ஷயமாம்

நண்ணுவார்க்கு   வேண்டுவன     நாட்டமொடு  ஈகின்ற

சீரடியின்         சாயிபாபா       நேரமர்ந்து    கண்புகுந்து

உள்ளத்தே       மன்னுகின்ற     உன்னதத்தால் பேருவப்பே!

தள்ளரிய        தேவனவன்      தந்திடுக       நற்காப்பே!

விள்ளரிய       நல்வியாழன்    சீர்விரதம்      ஏற்றிட்டு

அள்ளிடுவோம்  நேரருளை      அன்னவனின்   வாழ்த்தாலே!

-கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!