கரிசல் மண்ணின் நாயகன் திரு. கி.ரா அவர்களைப் பற்றி ஜனவரி மாதம் நான் எழுதிய கவிதையினை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அன்னாரது மறைவு இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு.
நூற்றினை எட்டும் நுண்ணியர் வாழ்கவே!
ஈரெழுத்தில் கி.ரா.என்றால் ராஜநாரா யணர்தாமே!
அன்னார்தான் நூற்றினையெட் டும்நுண்ணியர் ஆவாரே!
தூத்துக்குடி, கோவில்பட்டி இடைச்செவல் தோன்றலவர்!
செல்வவளம் மிக்கதோர் இல்லினில் நேர்பிறப்பே!
கற்றதோ வகுப்பேழ் மட்டிலே ஆயினும்,
வேளாண்மை ஏற்றவர், ஊரினில் வாழ்ந்தார்.
வாழ்வினில் நாற்பது ஆண்டுகள் நண்ணிய
பின்பவர், ஏட்டினில் ஆக்கிடும் சீர்பணி
ஏற்றார்! சேர்கரிசல் பூமிமக்கள் வாழ்வதனை,
நற்கதையாய், நாவலதாய், கடிதம்போல் இலக்கியத்தில்
பல்வேறு தளமெலாம் முத்திரையைப் பதித்தாரே!
பல்கதைகள் ஓர்தொகுப்பு, “ நாட்டுப்புறக் கதைக்களஞ்
சியமா”ய்ச் , சற்றொப்ப ஆயிரம் பக்கத்தில்
நேர்வைத்தார்! சிற்சிலவாம் நற்கதைகள் ஆங்கிலத்தில்
பெயர்ப்பெய்தி, அன்னாரின் நற்புகழைக் கூட்டினவே!
“கோபல்ல புரமக்கள்” பேர்நாவல், “ சாகித்ய
அகடெமி” பரிசீட்டித் தந்ததுவே! மாண்பினர்க்கு
“கரிசல் இலக்கியத் தந்தை” எனும் விருதேற்க,
நற்சிறப்பு பெற்றதுவே! தமிழக அரசும்,
மற்றும் பல்லமைப்பும், பாராட்டி மகிழ்ந்தனவே!
“சரஸ்வதி” பேரிதழில், அன்னாரின் முதல்கதை
“மாயமான்” வாசகர்க்கு ஆனதுவே! எழுத்தாலே,
கரிசலாய்க் கிடக்கும் சாரிடத்து, வாழ்மக்கள்
வாழ்முறை, காண்துன்பம், உள்நம்பிக்கை, எய்துகின்ற
ஏமாற்றம், அத்துணையும் நேர்வைத்தார் நாடறிய!
நற்புதுவைப் பல்கலைப் பேராசி ரியரானாரே!
பாண்டிதனில் இலாஸ்பேட்டை அரசினர் குடியிருப்பு
வாழ்மேதை! தள்ளாத வயதினிலும் சோர்வின்றி,
எழுத்தாலே, நற்றொண்டு தொடர்கின்றார்! வாழிநீவிர்!
நற்றமிழும், செந்தமிழர் உள்ளவரை மன்னுகவே!
-கவிஞர் கணக்காயன் ( இ. சே. இராமன்)
செல்: 9486085711
சிறப்பான கவிதை.
ReplyDeleteஅவர் மறைந்தாலும் அவரது எழுத்தும் புகழும் என்றும் மறையாது.