Friday, 20 December 2013

காப்புக் கவிதை- அருள் வேண்டல்-கவிஞர் கணக்காயன்( இ.சே.இராமன்)



விநாயகர்.

அல்லல்         அகற்றும்         செல்வ            விநாயகா!
நல்லன          அருளும்           கணபதித்       தேவே!
கல்வியும்      செல்வமும்    களித்திட        நல்கும்
விக்ன             விநாயகா         நின்னருள்     சேரே!


தென்கலை ஶ்ரீனிவாசப்பெருமாள், முத்தியால்பேட்டை.

பூத்தபுகழ்              புதுவைசேர்            முத்தியால்பெட்        காந்திவீதி
மாத்தமிழின்        தென்கலைசேர்     சீனிவாசர்                    பத்மவதி
ஏத்துமிசை            ஆஞ்சநேயர்           ஏற்றமிகு                     ரங்கநாதர்
காத்தருளும்        நல்லிராமர்             கண்ணனெனும்       மாலவரும்
தூண்பிளந்த        சிங்கமுகர்               மற்றுள்ள                   வீரஆஞ்ச
நேயரொடு            கோதண்ட              ராமர்தம்                       பேரருளை
தூயமனம்             வந்திக்கும்!            கூம்பாதே                   மாக்கருணை
நேயமொடு          சேர்த்தெனக்கு,     காண்முயற்சி           வெற்றிபெற 
ஈந்தருள்வீர்         மாலவரே!             ஈதெனது                     வேண்டுதலே!      

                                                            நடராசர்.              

ஆதிரைமீன்           சேர்ந்துமிளிர்           ஆருத்ரா              நல்விழாக்காண்
மார்கழியில்           தில்லையில்,            குற்றால            சித்ரசபை
நெல்லையில்        தாமிரத்தே                கூத்தரசர்             மாண்நடனம்!
நாவூரும்                  நற்களிபோல்          ஆவுடையார்     கோவிலிலே
மாணுபதே              சக்காட்சி                    கொண்டருள்     ஈசன் தன்
மாக்கருணை        வேண்டுகின்றேன் ஏற்றபணி          வெற்றியுற
மத்வரகு                   நாதரொடு                  சைவசடை        யர்தானும்
பக்கலிலே             நற்றுணையாய்       பாங்காக             நின்றருள்வீர்!


பிற புதுவை மூர்த்தங்கள்

சீர்புதுவை           மணக்குளவி             நாயகரே!               மற்றுமுள
ஆர்புகழ்சேர்      வரதராச!                     லக்‌ஷ்மிஹ         யக்ரீவ!
தேவிப்ரத்            யங்கரா!மாண்          பஞ்சநதீஸ்வர்!   காமீஸ்வர்!
பாப்படைக்க      நூல்மலர                     பக்கலிலே           நின்றருள்வீர்!

திருத்தல தெய்வங்கள்

ஏற்றமிகு            அகோபிலத்தில்    ஏழ்வரையாம்           வேங்கடத்தில்
ஆற்றிடையே   அரங்கத்தில்           முக்கியமாம்             கச்சிதன்னில்
அல்லிக்கே        ணியில்,எவ்வுள்    ளூரதனில்,                ஆரணியில்
உத்திரமே           ரூரதனில்                " பாலவனம்"              இளங்காட்டில்
பாதூராம்           நல்லூரில்                 பாங்காகக்                 கோயில்கொள்
மாலவரின்       நல்லருளால்          நண்ணிடுக               வெற்றியே!

முந்தையர்

தொன்மைநாள்      மாவியாசர்,      வால்மீகி,               காளிதாசர்
மாக்கம்பர்,                நல்வில்லி,      வள்ளுவர்            மாண் அவ்வை,
தொல்கபிலர்,          பாரதி,பின்        பாவேந்து,            வள்ளலார்,
நாமக்கல்                  சீர்கவிஞர்,       தேசிகவி                நாயகமும்,
கண்ணதாசன்,        நல்வாலி,        வைரமுத்து,        காண்சுரதா
சந்ததியாய்ப்           பின் தொடர    வாழ்த்திடுவீர்     என்றனையே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)        


Wednesday, 18 December 2013

ஓவியக்கவிதை!-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

அன்பு நண்பர், என் வலைப்பூவின் தந்தை திரு.வெங்கட்நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று, மேலே உள்ள ஓவியத்திற்காக நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு!


 பூமணக்கும்                     நற்சோலை          உண்கனியீன்    நீள்மரங்கள்!
 தூநிழல்சேர்                    மண்டபத்தின்       சூழலண்மை     நல்லிருக்கை!
 மூதன்பின்                நாயகனின்             முன்னமர்ந்த          காரிகையாள்!
 ஊட்டமிகு                        கார்குழலில்          துய்வெண்மை      கந்தமலர்
 சூடிநிற்கும்                       நேரிழையாள்       உள்ளபடி                 நாற்குணமும்
 துய்யதுவாய்க்               கைவளையும்       காற்சிலம்பும்        நன்கமைந்த
 நுண்ணியநல்                 குங்குமத்தாள்!     கச்சீர்க்கும்             பின்னழகால்
 முன்சரியும்                      நற்சேலை            நல்லுவப்பால்       நேர் ஈர்க்கும்
 கார்வண்டும்                   தேனீயும்                    பூமதுவை             ஏற்பதனை
 அன்னவளைக்              கொட்டிடுமோ?        என்றவந்தான்      ஓட்டுவதை

 தந்துள்ளீர்                       சித்திரமாய் !                ஓவியப்பா            ஏற்பீரே!

                                                               கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

குறிப்பு:
என் நண்பர் தன்னுடைய வலைப்பூவில் இதை வெளியிட்டுள்ளார். அதற்கான சுட்டி இதோ!   http://venkatnagaraj.blogspot.com/2013/12/1.html
அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்!

படியுங்கள்! தங்களின் கருத்துகளைப் பதியுங்கள்! நன்றி!

Sunday, 15 December 2013

என்னைப் பற்றி நட்பாசிரியர், கவிஞர் ஆரணி கா.மு.உமர்! -கவிஞர் கணக்காயன் இ.சே.இராமன்

நட்பின் வாழ்த்து!


இனியவனே!                இராமனேஎம்                       அன்பு                       நண்ப!
இளமைமுதல்             தென்றலைப்போல்           பழகும்                    உன்றன்
கனியமுதத்                  தமிழையாம்                         மறப்ப                     தில்லை!
கார்த்திகையின்          மழைபோலப்                       பொழியும்             நட்பைத்
தனித்திருந்து               நினைக்கின்றேன்!             உன்னைப்             போன்று
தகைமைமிகு               நண்பர்தாம்                           யாரே                     என்று
பனிமலரைப்               போன்றநெஞ்சம்                 உனது                    நெஞ்சம்!
பாசத்தின்                      அருவியுன்றன்                   செந்தேன்             பேச்சு!

பாரதிஉன்                       மானசீக                                ஆசான்!                 அன்னோன்
பாதையிலே                  உன்பயணம்                       தொடர்ந்தாய்!     உன்றன்
மார்பினிலே                  பூணூலைத்                        தரித்தாய்!             ஆயின்
மனத்தினிலே               மனுநூலைத்                     தரித்த                    தில்லை!
பாருலகை                     படைத்த இறை                 நீக்க                         மின்றிப்
பரவியுள்ளான்             எவ்வுயிர்க்கும்                 உயிராய்               என்னும்
ஆரமுதம்                       நிகரான                               மெய்ஞ்                  ஞானத்தை
அரும்பிளமை              நாள்முதலாய்த்               தலைமேற்           கொண்டாய்!

குளங்களெல்லாம்     தாமரையின்                     குவிந்த                   மொக்கால்
கும்பிடுதல்                   போல்விளங்கும்             காட்சி                       சூழ்ந்த
வளம்செறிந்த             "இளங்காடாம்"              சிற்றூர்                     சூழ்ந்து
வாழ்கின்ற                   வைணவர்தம்                    மரபில்                    தோன்றி
உளம்கொள்ளைக்     கொண்டதமிழ்                  செழித்தே               ஓங்க
உயர்தொண்டு            புரிபவனே!                          இராமா!                   எல்லா
நலங்களுடன்             நிலமீதில்                            சான்றோர்               போற்ற
நல்வனசா                    மணியுடனே                    வாழ்க!                      நீடு!
                                  
                                                                                                        -ஆரணி உமர்
 
26-02-1999ல் கவிஞர் கணக்காயன் என்னும் திரு. இ.சே.இராமனை எண்ணி
வாழ்த்தி எழுதிய கவிதை!

Thursday, 24 October 2013

வாழ்த்துக் கவிதை!- கவிஞர் கணக்காயன்!

பொன்னேரி நூலகத்தே "ஆசிரியத் தொண்டு அறத் தொண்டு" என்று சொற்பொழிவாற்றிய தமிழாசிரியை இரா.குழலி இரத்தினம் M.A., B.Ed., திறன் போற்றிப் பாராட்டிய வாழ்த்துக் கவிதை!
------------------- ***********---------------****************----------***********************

பொன்னேரி         நூலகத்தே           ஒண்தமிழில்          நின்பொழிவு
மன்றிருந்து         கேட்டவர்கள்       மாமகிழ்வு              கொண்டுனது
மன்னியசீர்         சான்றாண்மை   மண்டியநல்             நாவன்மை
நன்றென்று         பாராட்டி                நல்கினராம்              நன்றிகளை!

அன்னவர்கள்     பன்முறையும்    நின்வருகை            வேண்டுமென
கன்னல்நேர்        கற்கண்டு             நாப்படையல்          நேர்தொடர
தன்விழைவை  கொண்டிட்டார்  என்றறிந்து              நானுவந்தேன்!
நின் தாயும்           நேர்களிற்றாள்!  இன் தமிழாய்       மன்னுகவே!

தத்துவத்தின்     வித்தகத்தால்     தள்ளரிய                 சான்றாண்மை
சித்தத்தே             நேர்தேக்கி           இன்கல்வி              கற்பித்தே
ஒத்தவரும்         மிக்கவரும்          யாருமின்றி           நாடுயர
உத்தமமாய்       நேர்தலைமை     உற்றவர்போல்    நீடுகவே!

ஆசிரியர்            தொண்டுதனை    நல்லறமாய்         ஏற்றுயரும்
மாசில்சீர்           நல்லெழுத்தும்     மாணார்ந்த           நாநலமும்
காசினியோர்   போற்றிடவே         ஆற்றலது             மிக்குயர்ந்து
நேசிக்கப்           பல்லோரும்           தேயத்தே             ஓங்குகவே!



இன்னணம் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

                                                                                    தாய்:  அர.வனஜாமணி
                                                                               தந்தை:   இ.சே.இராமன்.
பொன்னேரி-601204
22-10-2013
செவ்வாய்.

Sunday, 1 September 2013

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு!- கவிஞர் கணக்காயன்.


             
இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா இனிதே நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

             -கவிஞர் கணக்காயன்

Saturday, 30 March 2013

ஓவியத்திற்கு கவிதை-கவிஞர் கணக்காயன்


வலைப்பூ அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று ஒரு கவிதை படைத்துள்ளேன்!



சிற்றூரின்           நீள்சாலை,             ஓர்பக்கம்                        நன்நீழல்

சுற்றுமுள          ஓங்குமரம்,            சுந்தரியாள்                    அங்கமர,

பற்றோடும்        ஈரன்னம்,               பக்குவமாய்                 நீருணியில்,

நற்றவமே         ஆற்றல்போல்,     தம்மன்பை                  நேர்பகிர்ந்து,

புற்றரையின்   மாதினுக்கு            புத்திமதி                        சொல்கிறதோ?

வற்றாத             நல்லுறவு              வாகாகப்                        பெற்றிடற்கே!


காற்றாலே       ஊருணியின்        நீர்ப்பரப்பில்                 காண்சலனம்,

ஏற்றாற்போல் தாமரைப்பூ          கூம்பியவை                சற்றசைவு,

ஆற்றாமை      நெஞ்சத்தே,         ஆறலைக்கும்             எண்ணங்கள்

சேற்றினிலே   வாழ்தவளை     சேர்த்தொலிக்கும்     சத்தங்கள்,

தோற்றமாம்    பல்மீன்கள்          ஒக்கனவாய்               நீந்துமெழில்,

தேற்றத்தைத் தந்திடுமோ           ஏந்திழைக்கு             இச்சூழல்?

மாற்றமிலா     ஏமாற்றம்            மாணிழைக்கு           எஞ்சிடுமோ?
                

                                                                         -கவிஞர் கணக்காயன்.