வாயிற்படியில்
பூச்சரத்து மாண்மங்கை!
அட்டிலறைக் காரிகையாள் வாயிலிலே நிற்பதேனோ?
கட்டிவைத்தப் பூச்சரத்தை கைத்தலத்தே ஏந்தலென்னே?
கட்டுடலாள் பூத்தவள்தான் என்றுரைக்கும் நேர்த்தியதோ?
மட்டில்லாக் காமத்தால் மாணழிதல் காட்டினளோ?
வெட்டுகின்ற கண்ணிரண்டால்,
காலெழுதும் பான்மையோ?
மெட்டியதைக் கால்விரலில், பூட்டும்நாள் நேர்விழைவோ?
சட்டெனவே மார்பசைய, மங்கலநா(ள்)ண் வேட்பதுவோ?
தும்பியென, தேனீபோல், ஆடவர்கள் நண்ணாளே!
காண்வேரில் தீம்பலவாய், பெண்ணவள்தான் காணுகின்றாள்!
மேளம்கொட் டும்நாள்,நல் நாதஸ்வரம் கேட்கும்நாள்,
ஆளன்காண் மன்றல்நாள், வேட்பதனைச் சாற்றுவளோ?
தன்றன்னைத் தாயாக்கும், தன்மையரால் சேய்பயந்து,
நற்கிழவி என்றமையும் நாட்டந்தான் சாற்றினளோ?
விட்டிலென மாய்த்துவிடும், தீத்திறத்தார் தன்பக்கல்,
நண்ணாத பாங்கதனால், நன்மகிழ்வின் சீர்முகமோ?
நாட்காட்டி ஏடழிதல் போல்,நாள்போம் பாங்கேனோ?
வாட்டத்தைப் போக்கிடற்கு, வல்லாரைக் காணாவல்
கூடியதால், நங்கைதான் வாயிலுக்கே வந்தாளோ?
தத்தைபோல், பூங்குயிலாய் கான்மயிலாய், மான்விழியாள்,
அன்னம்நேர் மென்னடையாள், ஆரணங்கு தோன்றுவளே!
வென்றிடுக நல்லெண்ணம்! வேட்பான இல்லமைக!
நன்றான எல்லாமும், நேர்தொடர்க அன்னவட்கே!
மன்னுலகில் மாப்புகழால், இல்லறத்தே ஓங்குகவே!
தென்தமிழாய், தண்ணிலவாய், தென்றலென நீடுகவே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)
(திரு ரூபன் அவர்கள் நடத்தும் கவிதைப்போட்டிக்கான கவிதை)
அருமையான கவிதை ஐயா....
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தளத்தில் தங்கள் தளம் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete