Sunday, 1 September 2013

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு!- கவிஞர் கணக்காயன்.


             
இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா இனிதே நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

             -கவிஞர் கணக்காயன்

Saturday, 30 March 2013

ஓவியத்திற்கு கவிதை-கவிஞர் கணக்காயன்


வலைப்பூ அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று ஒரு கவிதை படைத்துள்ளேன்!



சிற்றூரின்           நீள்சாலை,             ஓர்பக்கம்                        நன்நீழல்

சுற்றுமுள          ஓங்குமரம்,            சுந்தரியாள்                    அங்கமர,

பற்றோடும்        ஈரன்னம்,               பக்குவமாய்                 நீருணியில்,

நற்றவமே         ஆற்றல்போல்,     தம்மன்பை                  நேர்பகிர்ந்து,

புற்றரையின்   மாதினுக்கு            புத்திமதி                        சொல்கிறதோ?

வற்றாத             நல்லுறவு              வாகாகப்                        பெற்றிடற்கே!


காற்றாலே       ஊருணியின்        நீர்ப்பரப்பில்                 காண்சலனம்,

ஏற்றாற்போல் தாமரைப்பூ          கூம்பியவை                சற்றசைவு,

ஆற்றாமை      நெஞ்சத்தே,         ஆறலைக்கும்             எண்ணங்கள்

சேற்றினிலே   வாழ்தவளை     சேர்த்தொலிக்கும்     சத்தங்கள்,

தோற்றமாம்    பல்மீன்கள்          ஒக்கனவாய்               நீந்துமெழில்,

தேற்றத்தைத் தந்திடுமோ           ஏந்திழைக்கு             இச்சூழல்?

மாற்றமிலா     ஏமாற்றம்            மாணிழைக்கு           எஞ்சிடுமோ?
                

                                                                         -கவிஞர் கணக்காயன்.

Sunday, 7 October 2012

செய்யில் சேய்!- கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)



                                                              செய்யில் சேய்!

சேற்றுவயல்   தன்னிலங்கு    ஏற்றமிகு            மாதர்கள்
நாற்றுமுடி       கட்டெடுத்து    நாலெண்ணிப்   பக்குவமாய்
சேற்றழுத்தி    ஆழ்த்துவிரல் தன்னளவில்      நட்டுழைக்கும்
ஆற்றலதைச்  சாற்றுவது      அம்மவோ           இயலாது!
நாற்றனைய   பிஞ்சொன்று  தன்கைகள்           ஜோடிதனில்
தேற்றமாய்    கட்டுநாற்று     ஏற்றுச்செல்       பெண்பிள்ளை
"தோற்றிடாது  வேளாண்மை" பின்னாளில்  இவ்விளையர்
ஏற்றங்கள்   சேர்ப்பதுவாய்     நண்ணிடுது          மாமகிழ்வே!

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: தென்றல் சசிகலா

Monday, 1 October 2012

சித்தி! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

சித்தி!
 
 
தாயின்பின்     தோன்றியவள்!    தந்தைதன்       தம்பியரின்
 
தூயிதய             நாயகிகள்              தாதைகாண்    நற்றுணைவி
 
போயினபின்    தாரமென              வந்திட்ட          சீர்மாது
 
சேயினத்து       சித்தியாக             சேமங்கள்        சேர்த்திடுவர்!
 
தாயிதயம்,       இன்சொல்சேர்    ஆதரவு,              நற்பாசம்,
 
தன்மதலை      மூத்தாளின்          எச்சமென        வேறுபடா
 
ஒத்தநிலை      காட்டுமுளம்       கொண்டமையும்  பண்பமைந்தால்
 
சித்தியாக          வந்தாலும்            சீர்தாய்தான்     அன்னவளே!
 
 
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Saturday, 15 September 2012

இமை! -கவிஞர் கணக்காயன்


இமை!

கண்அனைய        கேள்வருக்கு காண்இமையே நன்மனைவி!
அண்ணனுக்குத் தம்பியரும்      அங்ஙனமே         நேரமைவர்!
மண்ணாளும்       சீர்முதல்வர்    மாண்பிரதமர்      அன்னவர்க்குத்
திண்ணமாக          நிர்வாக            ஊழியர்கள்            அத்தகையோர்!
வாழ்மதலை         யாவர்க்கும்     தாய்தந்தை           அப்படியே!
கண்ணிரண்டைக்   காப்பதுவும் மேல்கீழாம்         சீரிமையே!
கண்ணுக்குள்       பாவையாய்     கண்டிடுவோம் பெண்ணிணத்தை!
கண்இமையார்    தேவரெனல்    கற்பனையோ?   உண்மையோ?

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)