Wednesday, 19 May 2021

கி.ரா. வின் புகழ் வாழ்க!

 

 கரிசல் மண்ணின் நாயகன் திரு. கி.ரா அவர்களைப் பற்றி ஜனவரி மாதம் நான் எழுதிய கவிதையினை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அன்னாரது மறைவு இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு.

நூற்றினை எட்டும் நுண்ணியர் வாழ்கவே!



ஈரெழுத்தில் கி.ரா.என்றால் ராஜநாரா யணர்தாமே!

அன்னார்தான் நூற்றினையெட் டும்நுண்ணியர்  ஆவாரே!

தூத்துக்குடி, கோவில்பட்டி இடைச்செவல் தோன்றலவர்!

செல்வவளம் மிக்கதோர் இல்லினில் நேர்பிறப்பே!

கற்றதோ வகுப்பேழ் மட்டிலே ஆயினும்,

வேளாண்மை ஏற்றவர், ஊரினில் வாழ்ந்தார்.

வாழ்வினில் நாற்பது ஆண்டுகள் நண்ணிய

பின்பவர், ஏட்டினில் ஆக்கிடும் சீர்பணி

ஏற்றார்! சேர்கரிசல் பூமிமக்கள் வாழ்வதனை,

நற்கதையாய், நாவலதாய், கடிதம்போல் இலக்கியத்தில்

பல்வேறு தளமெலாம் முத்திரையைப் பதித்தாரே!

பல்கதைகள் ஓர்தொகுப்பு, “ நாட்டுப்புறக் கதைக்களஞ்

சியமா”ய்ச் , சற்றொப்ப ஆயிரம் பக்கத்தில்

நேர்வைத்தார்! சிற்சிலவாம் நற்கதைகள் ஆங்கிலத்தில்

பெயர்ப்பெய்தி, அன்னாரின் நற்புகழைக் கூட்டினவே!

“கோபல்ல புரமக்கள்” பேர்நாவல், “ சாகித்ய

அகடெமி”  பரிசீட்டித் தந்ததுவே! மாண்பினர்க்கு

“கரிசல் இலக்கியத் தந்தை” எனும் விருதேற்க,

நற்சிறப்பு பெற்றதுவே! தமிழக அரசும்,

மற்றும் பல்லமைப்பும், பாராட்டி மகிழ்ந்தனவே!

“சரஸ்வதி” பேரிதழில், அன்னாரின் முதல்கதை

“மாயமான்”  வாசகர்க்கு ஆனதுவே! எழுத்தாலே,

கரிசலாய்க் கிடக்கும் சாரிடத்து, வாழ்மக்கள்

வாழ்முறை, காண்துன்பம், உள்நம்பிக்கை, எய்துகின்ற

ஏமாற்றம், அத்துணையும் நேர்வைத்தார் நாடறிய!

நற்புதுவைப்  பல்கலைப் பேராசி ரியரானாரே!

பாண்டிதனில் இலாஸ்பேட்டை அரசினர் குடியிருப்பு

வாழ்மேதை! தள்ளாத வயதினிலும் சோர்வின்றி,

எழுத்தாலே, நற்றொண்டு தொடர்கின்றார்! வாழிநீவிர்!

நற்றமிழும், செந்தமிழர் உள்ளவரை மன்னுகவே!

 



-கவிஞர் கணக்காயன் ( இ. சே. இராமன்)


செல்: 9486085711

Tuesday, 12 June 2018

ரங்கத்தில் நாதரொடு…



                                           ரங்கத்தில் நாதரொடு…

              -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)
 
11-06-2018
திங்கட் கிழமை  (காலை 11.30 மணி)

நன்றி: திரு வெங்கட்நாகராஜ்

Friday, 14 August 2015

சுதந்திரச் சிந்தனை! -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

சுதந்திரச் சிந்தனை!

பூஞ்சோலை           முதிர்வண்டாய்     புகழ்பூத்த         கூத்தரச!
மாஞ்சோலைக்     குயில்களென         மாக்கவிதை    வடிப்போரே!
காஞ்சி                        அண்ணன்                கழகஞ்சேர்       நட்பினரே!
வாஞ்சையொடு     யானுமிங்கு           வழங்கிடற்கு    நற்கவிதை
தீஞ்சுவைசேர்          நற்றமிழில்           ஈந்திட்டீர்             வாய்ப்பதனை!
கஞ்சிகண்ட             பசித்தோன்போல்   கழறுவன்யான்   ஈண்டு!
நெஞ்சிருக்கும்        சேதியெலாம்        நேர்த்தியாய்        வடித்தற்கு
நஞ்சிருக்கும்          கண்டத்தான்            நாரணனும்        நேர்காப்பே!

"வாழ்க                        சுதந்திரம்"              என்றே               ஒலித்தற்கும்,
ஆழ்ந்து                       மகிழ்ந்து                 ஏட்டினில்          வடித்தற்கும்,
கீழ்மேல்                    இலாத                        பொதுமை       காண்தற்கும்,
கூழ்குடில்                 உடையும்               குன்றாக்             கல்வியும்
தாழ்விலா                 தனைவரும்          தட்டின்றி           பெறுதற்கும்,
பாழ்மது                     தீண்டாமை            கதிர்முன்          பனிபோல்
அற்றிடக்                   காண்தற்கும்,        ஆனதோ            சுதந்திரம்?
மற்றிதனால்           "வாழ்க                     சுதந்திரம்"        என்பேனோ?


பேச்சுச்                     சுதந்திரம்,                 ஏச்சுச்                  சுதந்திரம்
ஆச்சு                          அதனால்,                சுதந்திரம்           என்பேனோ?
எழுத்துச்                 சுதந்திரம்                   ஏளனப்              பொருளாய்,
பழுதாய்                  ஆனதால்                   உரிமை             என்பதுவோ?
வாக்குச்                  சுதந்திரம்                   வீணருக்கு        ஆனதால்
போக்கினைக்       கண்டு                        நோகவே             ஆனது.
ஏட்டில்                    உள்ளது                      நாட்டில்               காணோமே!

அயலவர்               ஆட்சியில்                 மொழிகளின்     மதிப்பு,
நம்மவர்                  வந்தபின்                    முழுமை            காணலையே!
அரசியல்                வாணிபம்,                 சொத்து                சேர்க்கையும்,
பதவிக்காக           கொள்கை                    பறத்தலும்,       காண்கையில்
எற்றுக்குச்             சுதந்திரம்                     என்றெண்ணிட  ஆனதுவே!
வழிபடு                  உரிமை                         அழிந்திடும்         போதினில்
பழியிது                 சூழும்                              ஆள்வோர்           கூட்டு
கழிவது                 எந்நாளோ?                    இஃதோ                சுதந்திரம்!

நீதிமன்று            நடுநிலை                       நில்லாப்               பான்மையில்,
ஆள்வோர்         எண்ணமே                     தீர்ப்பாய்               வடித்திடும்
நிலைஎண்ணில்  இஃதோ                       சுதந்திரம்             என்போமே!
சமத்துவம்,        சகோதரத்துவம்,         தேடினும்;            கட்புலன்
ஆகாநிலை,       சண்டையும்,               குருதியாறும்       என்றிடில்,
என்னே                சுதந்திரம்?                    எங்கே                      சுதந்திரம்?
வாழ்த்திடும்      மனம்                              வருமோ?             நெஞ்சில்
"வாழ்க                  சுதந்திரம்"                   என்றிடத்              தோன்றிடுமோ?

சுரண்டல்,           லஞ்சம்,                           ஊழல்                 கீழ்முதல்
பரந்து                    மேல்வரை                     விரவி                 நின்றிடல்
சுதந்திரத்             திருநாடோ?                  சூழ்ச்சி                 வென்றிட
அறத்தைத்          தின்றிடக்                        கண்டிடும்          போதினிலே,
மறந்தும்              வாழ்ந்திடும்                 எண்ணம்             வந்திடுமோ?
"வாழ்க                சுதந்திரம்"                       எனும்படி,          ஏற்றங்கள்
சூழ்ந்திட             மாற்றங்கள்                  கண்டிட,                நாட்டினர்
ஆழ்ந்திட           வேண்டுவன்                என்சிறுநா           அசைவாலே!

எல்லோரும்      கற்றிட்டார்                   என்றநிலை,      வேலையற்றோர்
இல்லை               என்றிடும்                       ஏற்றநிலை,     வகுப்புவாதம்
இனவெறி            சமயச்சண்டை          இங்கில்லை      எனும்சேதி,
நாளெலாம்         நாடெங்கும்                 என்றிட்டால்,     என் இதழ்
அசைந்து              மகிழ்வாலே               "வாழ்க                 சுதந்திரம்"
என்றிசைக்க       தன்னாலே                 எக்களிக்கும்!      இந்தநிலை
இன்றுளதோ      மாநிலத்தீர்!               சிந்தைக்கே         விட்டிடுவேன்!
நன்றாகும்           நாள்கண்டு                 வாழ்த்துரைக்கச்   சேர்ந்திடுவோம்!

என்மனதில்       பட்டதனை                என்பாட்டாய்          உம்மிடையே
நும்சிந்தைக்கு  நேர்வைத்தேன்!      நன்றுளதேல்         கொண்டிடுக!
அன்றென்னில்  தள்ளிடுக!                 அன்னைத்              தமிழிங்கு
ஏற்றம்பெற,        தமிழரெலாம்          நேரோங்க,            தமிழகமும்
முந்திநிற்க,          பாரதமும்                பாரினிலே            முதலாக,
வந்திடுநாள்        உள்ளமெலாம்        உவகைபெற        ஆக்குவிக்கும்!
அந்நிலைக்கு      இச்சுதந்திரம்          வகைசெய்தால்    நாமொன்றிச்
"சுதந்திரம்            வாழ்க!"                     என்றிடச்                சேர்வோமே!

      
             -கவிஞர் கணக்காயன்  



Saturday, 13 September 2014

தீபாவளித்திருநாளையொட்டி நடத்தப்படும் கவிதைப் போட்டிக்கான ஓவியக்கவிதை!-இ.சே.இராமன்




வாயிற்படியில் பூச்சரத்து மாண்மங்கை!

அட்டிலறைக்  காரிகையாள்  வாயிலிலே      நிற்பதேனோ?
கட்டிவைத்தப்  பூச்சரத்தை    கைத்தலத்தே   ஏந்தலென்னே?
கட்டுடலாள்   பூத்தவள்தான்  என்றுரைக்கும்   நேர்த்தியதோ?
மட்டில்லாக்   காமத்தால்      மாணழிதல்      காட்டினளோ?
வெட்டுகின்ற  கண்ணிரண்டால், காலெழுதும்    பான்மையோ?
மெட்டியதைக் கால்விரலில்,     பூட்டும்நாள்    நேர்விழைவோ?
சட்டெனவே    மார்பசைய,    மங்கலநா(ள்)ண்  வேட்பதுவோ?
தும்பியென,    தேனீபோல்,    ஆடவர்கள்       நண்ணாளே!
காண்வேரில்   தீம்பலவாய்,   பெண்ணவள்தான்  காணுகின்றாள்!
மேளம்கொட்   டும்நாள்,நல்    நாதஸ்வரம்      கேட்கும்நாள்,
ஆளன்காண்    மன்றல்நாள்,   வேட்பதனைச்     சாற்றுவளோ?
தன்றன்னைத்   தாயாக்கும்,    தன்மையரால்     சேய்பயந்து,
நற்கிழவி       என்றமையும்    நாட்டந்தான்     சாற்றினளோ?
விட்டிலென    மாய்த்துவிடும்,   தீத்திறத்தார்     தன்பக்கல்,
நண்ணாத      பாங்கதனால்,     நன்மகிழ்வின்    சீர்முகமோ?
நாட்காட்டி      ஏடழிதல்        போல்,நாள்போம்  பாங்கேனோ?
வாட்டத்தைப்   போக்கிடற்கு,    வல்லாரைக்      காணாவல்
கூடியதால்,    நங்கைதான்      வாயிலுக்கே      வந்தாளோ?
தத்தைபோல்,   பூங்குயிலாய்    கான்மயிலாய்,    மான்விழியாள்,
அன்னம்நேர்    மென்னடையாள்,  ஆரணங்கு      தோன்றுவளே!
வென்றிடுக     நல்லெண்ணம்!     வேட்பான      இல்லமைக!
நன்றான        எல்லாமும்,      நேர்தொடர்க     அன்னவட்கே!
மன்னுலகில்     மாப்புகழால்,     இல்லறத்தே     ஓங்குகவே!
தென்தமிழாய்,    தண்ணிலவாய்,  தென்றலென    நீடுகவே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

(திரு ரூபன் அவர்கள் நடத்தும் கவிதைப்போட்டிக்கான கவிதை)

"புதியதோர் உலகம் செய்வோம்! "-கவிதைப் போட்டிக்கான இரண்டாவது கவிதை!- கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)


"புதியதோர் உலகம் செய்வோம்!"

நேற்றிருந்த   தின்றில்லா    நேர்த்தியதே    பாருலகு!
மற்றின்று     உள்ளதுவும்   மாறாதோ       நாளைக்கே!
சற்றிதனைச்   சிந்தித்தால்,   சான்றாண்மை  நற்றுணையாய்
முற்றிலுமே   புதியதோர்    முழுதுலகு      காணோமோ?

இல்லாதார்    இல்லாத       இயல்பினதாய்   மாற்றோமோ?
நல்லுளத்தார்  தம்முடமை    நல்குரவைப்     போக்காதோ?
பல்லறிவுச்    சான்றோர்கள்   பாமரர்க்கே     உணர்த்தோமோ?
மெல்லினத்தார் நாற்குணத்தால் மேதினியில்    உயரோமோ?

தன்காலில்       நிற்கின்ற     தன்மைக்கே    நாமாவோம்!
நன்றாற்றல்     ஒன்றினையே  நாட்கடனாய்  கொண்டிடுவோம்!
பன்மொழிகள்    கற்றாலும்     பற்றாவோம்   தாய்மொழிக்கே
எந்நாடு          சென்றாலும்   ஏந்திடுவோம்   நம்பண்பை!

மேலையர்    தோற்றத்தை    மேவிடாதே     நாமெல்லாம்
பாலையைச்   சோலையாய்   பார்த்திடற்கே   நாமுழைப்போம்!
மாலைகாண்   தண்ணிலவில்  மண்டியுள      தண்ணீரை,
வேலைசூழ்     பாருலகில்,    வேணுமட்டும்   தேக்கிடுவோம்!

பொட்டலினைப் புன்செய்யாய்,   பொன்குவிக்கும்   நன்செய்யாய்,
இட்டமுடன்    நாமுழைத்து,   ஈத்துவக்கக்       காண்போமே!
திட்டமிட்டே    சீர்மிகுநம்,      திரைபடியும்       நெய்தலினை,
மட்டிலாப்     பல்வளத்தால்,    மாணுறவே       நாமுழைப்போம்!

மண்குடைந்து   பல்கனியும்,     மாகடலின்      பல்நிதியும்,
கண்டெடுத்துப்   பாருலகில்,     காரியங்கள்     ஆற்றிடுவோம்!
பண்ணிசையா?  நாட்டியமா?     பண்பாட்டைக்    காத்திடுவோம்!
குண்டுணியாய்த் தேங்காதே,      குன்றிலிட்ட      தீபமாவோம்!
 கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

போட்டிக்கான முதல் கவிதைக்கான இணைப்பு இதோ:

Monday, 13 January 2014

பொங்கல் வாழ்த்திற்கு நன்றி மடல்!- கவிஞர் கணக்காயன்




நன்றி மடல்!

பொன்மனத்தீர்!   நட்புளத்தீர்!      பொங்கல்நாள்    வாழ்த்தளித்தீர்!
பன்நலமும்          வாய்த்திடுக!    பார்போற்ற           உயர்ந்திடுவீர்!
இந்தமிழாய்,        வண்குறளாய், இசையோடு         நிலைத்திடுவீர்!
செந்நெல்லும்,    நற்கரும்பும்       செய் உயர்த்தல் போல்;நும்மில்
முன்னோரும்    பின்னோரும்     மூதின்பம்             கொண்டிடுக!
தென்குலப்பெண்  மஞ்சளென,   தேர்ந்தசுவை       இஞ்சியென,
மென்பாட்டாய்,  நற்கவியாய்,    மென்காற்றாய்,   நன்மழையாய்
மன்பதையில்     கேண்மையீர்!    மாண்புறுவீர்!  
நன்றியினைப்   படைக்கின்றேன்! நான்வணங்கி,       ஏற்பீரே!
  
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

பொங்கல் வாழ்த்து - கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)


பொங்கல் வாழ்த்து




   உழவர்                பெருநாள்!               தமிழர்                  திருநாள்!
   அழலனை          ஞாயிறுக்               கடிசில்                  படைநாள்!
   உழவினுக்         குதவிய                  பெருவலி             காளையும்
   குழவியாம்        அஃதின்                    சீரடிக்                     கன்றும்
   பழம்,பால்          பொங்கல்               கரும்பொடு         செந்நெல்
   சூழநின்                றேத்துவர்              குழலியர்,              தம்முடை
   குழவியர்            சுற்றமொடு           பழகியோர்            பல்கிட
   அழகாம்               இயற்கை              முருகின்               அருளால்
    வாழிய                 நிலனே!                வளத்தொடு         நீயும்!
    வாழியே              நீவிர்                       குறள்வழி            நின்றே!


                                  -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!